நிதி முகாமைத்துவம்

சட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக உடனடியாக வேண்டப்படாத ஊழியர் சேமலாப நிதியங்களை முதலீடுசெய்வதற்கு இலங்கை மத்திய வங்கிக்கு ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் 5(1) உ ஆம் பிரிவு அதிகாரமளித்துள்ளது. இந்நிதியங்கள் இலங்கை மத்திய வங்கி பொருத்தமானதெனக் கருதும் பல்வேறு பிணையங்களில் முதலீடுசெய்யலாம் என்பதுடன் இப்பிணையங்களை விற்பனை செய்வதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. நியாயமான இடர்நேர்வு சீராக்கப்பட்ட வருவாயினை வழங்குவதற்கான ஊழியர் சேமலாப நிதியத்தின் குறிக்கோள்களை கருத்திற்கொண்டு இந்நிதியங்கள் முதலீடுசெய்யப்படுகின்ற அதேவேளை நிதியத்தின் பாதுகாப்பையும் உறுதிசெய்கின்றன. உறுப்பினர்களுக்கான உயர்ந்தபட்ச ஓய்வூதிய நன்மைகளை வழங்கும் இறுதி இலக்காக் கொண்டு இம்முதலீடுகள் முன்மதிமிக்க மற்றும் புத்தாக்கமிக்க நிதிய முகாமைத்துவச் செயன்முறையினூடாக மேற்கொள்ளப்படுகின்றன.

நிதிய முகாமைத்துவம்

நிதியத்தின் மொத்த முதலீட்டுச் சொத்துப்பட்டியல் (புத்தகப் பெறுமதி), 2024 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 4,393.8 பில்லியனிலிருந்து 2025 இறுதியில் ரூ. 4,965.2 பில்லியனிற்கு 13 சதவீதத்தினால் உயர்வடைந்தது. 2025 இறுதியிலுள்ளவாறு, முதலீட்டுச் சொத்தப்பட்டியலானது அரச பிணையங்களில் 94.5 சதவீதத்தினையும் பங்குரிமை மூலதனத்தில் 4.3 சதவீதத்தினையும் கூட்டாண்மைத் தொகுதிக்கடன்களில் 0.6 சதவீதத்தினையும் நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கைகளில் மீதமுள்ள 0.6 சதவீதத்தினையும் கொண்டிருந்தது (அட்டவணை 1).

அட்டவணை 1: முதலீட்டுச் சொத்துப்பட்டியல்
முதலீட்டின் வகை 2025 2024
தொகை (ரூ.பில்) பங்கு (%) தொகை (ரூ.பில்) பங்கு (%)
திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் 4,693.0 94.5 4,153.3 94.5
பங்குரிமைமூலதனங்கள் 214.1 4.3 193.4 4.4
கூட்டாண்மை படுகடன் சாதனங்கள் 29.3 0.6 12.9 0.3
நேர்மாற்று மீள்கொள்வனவு 28.8 0.6 34.2 0.8
மொத்தம் 4,965.2 100.0 4,393.8 100.0

2025இல், நிதியத்தின் மொத்த முதலீட்டு வருமானம் ரூ.552.7 பில்லியன் தொகையாகக் காணப்பட்டது (அட்டவணை 2). வட்டி வருமானம் வருமானத்தின் முக்கிய மூலமாக விளங்கியதுடன் இது 2024இன் ரூ.455.1 பில்லியனிலிருந்து 2025இல் ரூ.506.9 பில்லியனிற்கு 11.4 சதவீதத்தினால் உயர்வடைந்தது. சீர்மதிப்புப் பெறுமதியில் நிதியியல் சாதனங்கள் மீதான தேறிய இலாபம்ஃ(நட்டம்), பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத பங்குரிமை மூலதனம் ஆகிய இரண்டிலிருந்தும் கிடைத்த நியாயமான பெறுமதி/(நட்டம்) போன்றவற்றைக் கொண்டிருந்தது. கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் நிலவிய சாதகமான விலை அசைவுகளினால் ஆதரவளிக்கப்பட்டு, பட்டியலிடப்பட்ட பங்குரிமை மூலதனத்திலிருந்தான ஈட்டல்கள் ரூ.54 பில்லியன் தொகையாகக் காணப்பட்டன. மேலும், பங்குரிமை மூலதனச் சொத்தப்பட்டியலிலிருந்தான பங்குலாப வருமானமானது 2024இன் ரூ.5.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2025இல் ரூ.6.6 பில்லியனிற்கு அதிகரித்தது.

அட்டவணை 2: முதலீடுகள் மீதான வருமானம்
வருமானத்தின் மூலம் 2025 2024
தொகை (ரூ.மில்) பங்கு (%) தொகை (ரூ.மில் பங்கு (%)
வட்டி வருமானம் 506,954.2 91.7 455,126.0 88.6
சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சாதனங்கள் மீதான தேறிய இலாபம் /(நட்டம்) 39,133.9 7.1 53,488.4 10.4
பங்கிலாப வருமானம் 6,589.0 1.2 5,481.1 1.1
நிதியியல் சொத்துக்களின் தேசஇழப்பு (0.8) (0.0) (313.7) (0.1)
மொத்தம் 552,676.4 100.0 513,781.7 100.0

ஊழியர் சேமலாப நிதியத்தின் பெரும்பகுதி திறைசேரி முறிகளில் உள்ளது. திறைசேரி முறிச் சொத்தப்பட்டியலின் 75 சதவீதத்திற்கு அதிகமானவை, 10.66 சதவீதம் கொண்ட நிறையேற்றப்பட்ட சாராசரி விளைவுடன் 5 ஆண்டுகளுக்கும் அதற்கு மேற்பட்ட முதிர்ச்சிக் காலப்பகுதிகளைக் கொண்ட முறிகளில் முதலீடுசெய்யப்பட்டுள்ளன. திறைசேரி முறிச் சொத்துப்பட்டியலின் முதிர்ச்சி தோற்றப்பாடு அட்டவணை 3இல் தரப்பட்டுள்ளது.

அட்டவணை 3: 2025 இறுதியிலுள்ளவாறு திறைசேரி முறிச் சொத்துப்பட்டியலின் முதிர்ச்சி தோற்றப்பாடு
முதிர்ச்சி முதிர்ச்சிப் பெறுமதித் தொகை (ரூ.பில்.) பங்கு (%) நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு (%)
01 ஆண்டிற்குக் குறைவானவை 125,455.29 2.6% 11.38%
1-2 ஆண்டுகள் 254,942.68 5.3% 10.02%
3-4 ஆண்டுகள் 825,337.35 17.1% 11.82%
5 ஆண்டுகள் மற்றும்  மேற்பட்டவை 3,628,782.29 75.1% 10.66%
மொத்தம் 4,834,517.61 100.0% 10.84%
நிதியத்தின் ஒட்டுமொத்த ஆதாயம்

நிதியமானது 2025இல் ரூ.553.3 பில்லியன் கொண்ட (அட்டவணை 4) ஒட்டுமொத்த வருமானத்தை ஈட்டியதுடன் தொழிற்பாட்டு மற்றும் வரிச் செலவினத்தின் பின்னர் பெறுவிக்கப்பட்ட ரூ.480.3 பில்லியன் கொண்ட தேறிய இலாபத்தைப் பதிவுசெய்தது. ஊழியர் சேமலாப நிதியமானது 2025இல் 11.81 சதவீதம் கொண்ட சராசரி முதலீட்டின் மீதான வருவாயினை ஈட்டுவதற்கு இயன்ற அதேவேளை 0.62 சதவீதம் கொண்ட மொத்த வருமானத்தில் தொழிற்பாட்டுச் செலவுகளைப் பேணியது.

2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் பிரகாரம், 2018 ஏப்பிறல் 01 தொடக்கம் நிதியத்திற்கான ஏற்புடைய வருமான வரி வீதம் 14 சதவீதமாகும். கிடைக்கப்பெற்ற பங்குலாபங்களிற்கான ஏற்புடைய வருமான வரி வீதம் 15 சதவீதமாகும். 2024இன் ரூ.64.137.1 மில்லியனுடன் ஒப்பிடுகையில் வரிச் செலவினமானது 2025இல் ரூ.69,511.2 மில்லியனிற்கு 8.4 சதவீத அதிகரிப்பொன்றைப் பதிவுசெய்தது. இதற்கமைவாக, ஊழியர் சேமலாப நிதியமானது 2025இறுதியளவில் உறுப்பினர் கணக்குகளுக்கான கொடுகடனின் நிலுவைத் தொகைக்கு 10.75 சதவீதம் கொண்ட வட்டி வீதமொன்றை அறிவித்திருந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதியத்தின் செயலாற்றக் குறிகாட்டிகளின் தொகுப்பு கீழே அட்டவணை 4இல் தரப்பட்டுள்ளது.

அட்டவணை 4: முக்கிய செயலாற்றக் குறிகாட்டிகளின் ஐந்து ஆண்டுகாலத் தொகுப்பு
விடயம் ரூ. மில்லியன்
2021 2022 2023 2024 2025
வட்டி வருமானம் 293,678 349,269 442,419 455,126 506,954
பங்கிலாப வருமானம் 6,685 7,528 2,997 5,481 6,589
சீர்மதிப்புப் பெறுமதியில் நிதியியல் சாதனங்களிலிருந்தான தேறிய இலாபம்/(நட்டம்) 41,840 (40,996) 35,683 53,488 39,134
நநிதியியல் சொத்துக்களின் பெறுமதியிழப்பு (1) (4) 4 (314) (1)
முதலீட்டு வருமானம் 342,203 315,797 481,103 513,782 552,676
ஏனைய வருமானம் 172 270 241 326 610
முழுமொத்த வருமானம் 342,375 316,068 481,344 514,108 553,286
தொழிற்பாட்டுச் செலவினங்கள் (1,646) (2,134) (2,305) (3,045) (3,466)
வருமான வரி (41,657) (49,982) (63,134) (64,137) (69,511)
ஆண்டிற்கான இலாபம் 299,071 263,953 415,906 446,926 480,310
மசராசரி முதலீடு மீதான வருவாய் (%) 11.4 9.5 13.0 12.4 11.8
உறுப்பிளர் நிலுவைகள் மீதான வட்டி வீதம் (%) 9.0 9.0 13.0 11.0 10.75
இடர்நேர்வு முகாமைத்துவம்

முதலீட்டு நடவடிக்கைகளின் பொறுப்புக்கூறும் தன்மையினையும் வெளிப்படைத் தன்மையினையும் உயர்த்தும் நோக்குடன் அத்தகைய நடவடிக்கைகளின் தற்போதைய இடர்நேர்வு முகாமைத்துவக் கட்டமைப்பு 2019இல் மேலும் வலுப்படுத்தப்பட்டது. இதற்கமைய உபாயச் சொத்து ஒதுக்குகளுடன் முதலீட்டுக் கொள்கைக் கூற்றும் முதலீட்டு வழிகாட்டல்களும் திருத்தப்பட்டு  தற்போதுள்ள வேலை நடைமுறைகளை மேம்படுத்துவதற்காகவும் முதலீட்டு தீர்மானத்தினை மேற்கொள்ளும் செய்முறை தொடர்பில் பெருமளவு சுயாதீனத்தினை வழங்குகின்ற வேளையில் போதுமான மட்டத்தில் உள்ளகக் கட்டுப்பாடுகளைப் பேணுவதற்காக சந்தைத் தேவைப்பாடுகளுடன் இணங்கிச் செல்லும் விதத்தில் இற்றைப்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், இலங்கை மத்திய வங்கியின் இடர்நேர்வு முகாமைத்துவத் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் ஊ.சே.நிதியத் திணைக்களத்தின் முக்கிய நிதியியல் மற்றும் நிதியியல் அல்லா இடர்நேர்வு அம்சங்களை அடையாளம் காண்பதற்கும் அவை தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக உலக வங்கியின் நிபுணர் குழுவினால் அனைத்தையுமுள்ளடக்கிய இடர்நேர்வு மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டது. ஊ.சே.நிதியத் திணைக்களத்தின் நிதியியல் மற்றும் தொழிற்பாட்டு இடர்நேர்வுகளை முகாமைத்துவத்திற்கு அறிக்கையிடுகின்றமை தொடர்பான மார்க்கங்கள் உரிய வழிகாட்டல்களில் குறித்துரைக்கப்பட்டுள்ளன.