ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் 5(1)(உ) பிரிவு, சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்காக உடனடியாக வேண்டப்படாத ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதியங்களை முதலிடுவதற்கு இலங்கை மத்திய வங்கிக்கு அதிகாரமளிக்கின்றது. இந்நிதியங்கள் இலங்கை மத்திய வங்கியினால் பொருத்தமானவாறு கருதப்படும் பல்வேறு வகையான பிணையங்களில் முதலிடப்படலாம். அத்தகைய பிணையங்களை விற்பனை செய்வதற்கும் அதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. ஊழியர் சேமலாப நிதியங்களை முதலீடு செய்யும் முதன்மைக் குறிக்கோள் நியாயமானளவில் இடர்நேர்வு சீர்செய்யபட்ட ஆதாயங்களை ஈட்டுகின்ற அதேவேளை, நிதியத்தன் பாதுகாப்பினை உறுதிசெய்வதாகும். முதலீடுகள் முன்மதியும் எதிர்காலத்தை நோக்குகின்றதுமான நிதி முகாமைத்துவச் செயன்முறையொன்றினூடாக ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்களுக்கு ஓய்வுகால நன்மையினை உச்சப்படுத்தும் இறுதிக் குறிக்கோளுடன் முகாமைசெய்யப்படுகின்றன.
நிதிய முகாமைத்துவம்
நிதியத்தின் மொத்த மூலதனச் சொத்துப்பட்டியல் (ஏட்டுப் பெறுமதி) 2023 இறுதியில் பதிவாகிய ரூ.3,900.1 பில்லியனிலிருந்து 2024 இறுதியில் ரூ.4,393.8 பில்லியனாக 12.7 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. 2024 இறுதியிலுள்ளவாறு முதலீட்டுச் சொத்துப்பட்டியலானது அரசாங்கப் பிணையங்களில் 94.5 சதவீதத்தினையும் பங்குரிமைமூலதனத்தில் 4.4 சதவீதத்தையும் நிறுவனத் தொகுதிக்கடன்களில் 0.3 சதவீதத்தினையும் எஞ்சிய 0.8 சதவீதம் நேர்மாற்று மீள்கொள்வனவு உடன்படிக்கைகளில் என உள்ளடக்கியிருந்தது (அட்டவணை 1).
அட்டவணை 1: முதலீட்டுச் சொத்துப்பட்டியல்
முதலீட்டின் வகை | 2024 | 2023 | ||
---|---|---|---|---|
தொகை (ரூ.பில்) | பங்கு (%) | தொகை (ரூ.பில்) | பங்கு (%) | |
திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் | 4,153.2 | 94.5 | 3,722.2 | 95.4 |
பங்குரிமைமூலதனங்கள் | 193.4 | 4.4 | 138.1 | 3.5 |
நிறுவனப் படுகடன் சாதனங்கள் | 13.0 | 0.3 | 14.1 | 0.4 |
நேர்மாற்று மீள்கொள்வனவு | 34.2 | 0.8 | 25.8 | 0.7 |
மொத்தம் | 4,393.8 | 100.0 | 3,900.1 | 100.0 |
2024இல், நிதியத்தின் மொத்த முதலீட்டு வருமானம் ரூ.513.8 பில்லியன் (அட்டவணை 2). வட்டி வருமானம் நிதியத்தின் முக்கிய வருமான மூலமாக காணப்படுவதுடன் இது 2023இன் ரூ.442.4 பில்லியனிலிருந்து 2024இல் ரூ.455.1 பில்லியனுக்கு 2.9 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிதியியல் சாதனங்களிலிருந்தான வருவாய்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு அவதானிக்கப்பட்டு, ரூ.53.5 பில்லியனாக 10.4 சதவீதத்தினால் உயர்வடைந்தது. கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை மீதான அதிகரிக்கின்ற சந்தை விலைகள் மூலம் இது பாரியளவில் தூண்டப்பட்டிருந்தது. மேலும், பங்குரிமை மூலதனச் சொத்துப்பட்டியலிலிருந்து கிடைத்த பங்கிலாப வருமானம் 2023இன் ரூ.3.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2024இல் ரூ.5.5 பில்லியனாக உயர்வடைந்தது.
அட்டவணை 2: முதலீகள் மீதான வருமானம்
வருமானத்தின் மூலம் | 2024 | 2023 | ||
---|---|---|---|---|
தொகை (ரூ.மில்) | பங்கு (%) | தொகை (ரூ.மில் | பங்கு (%) | |
வட்டி வருமானம் | 455,126.0 | 88.6 | 442,419.3 | 92.0 |
பங்குரிமைமுலதன முதலீடுகளிலிருந்து சந்தை விலைகுறிக்கப்பட்ட இலாபம்/ நட்டம் | 53,488.4 | 10.4 | 35,682.6 | 7.4 |
பங்கிலாப வருமானம் | 5,481.1 | 1.1 | 2,997.3 | 0.6 |
நிதியியல் சொத்துக்களின் தேசஇழப்பு | (313.7) | (0.1) | 4.0 | 0.0 |
மொத்தம் | 513,782.7 | 100.0 | 481,103.3 | 100.0 |
திறைசேரி முறிச் சொத்துப்பட்டியலின் 80 சதவீதத்திற்கு மேற்பட்டவை 10.80 சதவீதம் கொண்ட நிறையேற்றப்பட்ட சராசரி ஆதாயத்துடன்கூடிய 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட முதிர்ச்சிகளில் முதலிடப்பட்டுள்ளன. 2024 இறுதியிலுள்ளவாறு திறைசேரி முறிச் சொத்துப்பட்டியலின் முதிர்ச்சித் தொகுப்பு அட்டவணை 3இல் தரப்பட்டுள்ளது.
அட்டவணை 3: அரச பிணையங்கள் சொத்துப்பட்டியலின் முதிர்ச்சித் தொகுப்பு
முதிர்ச்சி | முதிர்ச்சிப் பெறுமதித் தொகை (ரூ.பில்.) | பங்கு (%) | நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு (%) |
---|---|---|---|
01 ஆண்டிற்குக் குறைவானவை | 150.00 | 0.0% | 8.32% |
1-2 ஆண்டுகள் | 125,455.29 | 3.0% | 13.04% |
3-4 ஆண்டுகள் | 707,397.02 | 16.9% | 11.81% |
5 ஆண்டுகள் மற்றும் மேற்பட்டவை | 3,362,450.91 | 80.1% | 10.80% |
மொத்தம் | 4,195,453.23 | 100.0 | 11.04 |
நிதியத்தின் ஒட்டுமொத்த ஆதாயம்
2024இல், நிதியம் தொழிற்பாட்டு மற்றும் வரிச் செலவுகளுக்கான கணக்கீட்டின் பின்னர் ரூ514.1 பில்லியன் கொண்ட கூட்டு மொத்த வருமானத்தை பதிவுசெய்ததுடன் (அட்டவணை 4) ரூ.446.9 பில்லியன் கொண்ட தேறிய இலாபத்தினை அறிக்கையிட்டது. 2023இன் தேறிய இலாபத்துடன் ஒப்பிடுகையில் அது 7.5 சதவீத அதிகரிப்பாகும். ஊழியர் சேமலாப நிதியம் 2024இல் சராசரி முதலீடு மீது 12.4 சதவீத ஆதாயத்தினை ஈட்டக்கூடியதாகவிருந்த அதேவேளை தொழிற்படுத்தல் செலவுகளை மொத்த வருமானத்தின் 0.59 சதவீதமாக பேணியது.
2018 ஏப்பிறல் 01 இலிருந்து நடைமுறைக்குவந்த 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் நிதியத்திற்கு ஏற்புடைய வருமான வரி வீதம் 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதத்திற்கு அதிகரித்தது. கிடைக்கப்பெறுகின்ற பங்கிலாபங்களுக்கு ஏற்புடைய வருமான வரி வீதம் 15 சதவீதமாகும். வரிச் செலவு 2024இல் ரூ.64,137.1 மில்லியனாக அதிகரித்தது 2023இன் ரூ.63,134.1 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இ 1.6 சதவீத அதிகரிப்பாகும்.
அதற்கமைய, ஊழியர் சேமலாப நிதியம் 2024 இறுதியளவில் உறுப்பினர் கணக்குகளின் வரவிலிருக்கின்ற மீதிகள் மீது 11.00 சதவீதம் கொண்ட வட்டி வீதத்தினைப் பிரகடனப்படுத்தியது.
கடந்த ஐந்து ஆண்டுகளின் நிதியத்தின் செலாற்றுகைக் குறிகாட்டிகளின் தொகுப்பு கீழே அட்டவணை 4 இல் தரப்பட்டுள்ளது.
அட்டவணை 4: முக்கிய செயலாற்றக் குறிகாட்டிகளின் ஐந்தாண்டுத் தொகுப்பு
விடயம் | ரூ. மில்லியன் | ||||
---|---|---|---|---|---|
2020 | 2021 | 2022 | 2023 | 2024 | |
வட்டி வருமானம் | 277,409.0 | 293,678.3 | 349,269.2 | 442,419.3 | 455,126.0 |
பங்கிலாப வருமானம் | 2,985.0 | 6,685.5 | 7,527.8 | 2,997.3 | 5,481.1 |
சீர்மதிப்புப் பெறுமதியில் நிதியியல் சாதனங்களிலிருந்தான தேறிய இலாபம்/ (நட்டம்) | 5,023.1 | 41,840.1 | (40,995.6) | 35,682.6 | 53,488.4 |
நிதியியல் சொத்துக்களின் சேதஇழப்பு | 1.6 | (1.0) | (3.9) | 4.0 | (313.7) |
முதலீட்டு வருமானம் | 285,418.8 | 342,202.9 | 315,797.5 | 481,103.3 | 513,781.7 |
ஏனைய வருமானம் | 212.1 | 171.7 | 270.4 | 241.1 | 326.3 |
முழுமொத்த வருமானம் | 285,630.9 | 342,374.5 | 316,067.9 | 481,344.4 | 514,108 |
தொழிற்பாட்டுச் செலவினங்கள் | (1,645.1) | (1,646.1) | (2,133.8) | (2,304.7) | (3,044.7) |
வருமான வரி | (39,062.6) | (41,656.9) | (49,981.6) | (63,134.1) | (64,137.1) |
ஆண்டிற்கான இலாபம் | 244,923.2 | 299,071.4 | 263,952.5 | 415,905.6 | 446,926.2 |
முன்கொண்டுவரப்பட்ட பிடித்துவைக்கப்பட்ட இலாபம் | 129.1 | 429.9 | 61.3 | 46.4 | 759.1 |
பட்டியலிடப்பட்ட பங்குரிமை மூலதனம் மீதான தேறல்செய்யப்படாத இலாபம்/நட்டம் | – | (40,503.8) | 41,005.2 | (23,707.2) | – |
பட்டியலிடப்படாத பங்குரிமை மூலதனம் மீதான நிகர தேறிய இலாபம்/நட்டம் | – | – | – | (10,662.1) | (3,876.8) |
முன்னைய ஆண்டில் பட்டியலிடப்பட்ட பங்குரிமை மூலதனம் மீதான தேறிய இலாபம்/நட்டம் | – | – | – | – | 28,829.2 |
பகிர்ந்தளிப்புக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ள இலாபம் | 245,052.3 | 258,997.5 | 305,018.9 | 381,582.8 | 472,637.7 |
முதலீடுகள் மீதான வருவாய் (%) | 10.6 | 11.4 | 9.5 | 13.0 | 12.4 |
உறுப்பிளர் நிலுவைகள் மீதான வட்டி வீதம் (%) | 9.0 | 9.0 | 9.0 | 13.0 | 11.0 |
இடர்நேர்வு முகாமைத்துவம்
முதலீட்டு நடவடிக்கைகளின் பொறுப்புக்கூறும் தன்மையினையும் வெளிப்படைத் தன்மையினையும் உயர்த்தும் நோக்குடன் அத்தகைய நடவடிக்கைகளின் தற்போதைய இடர்நேர்வு முகாமைத்துவக் கட்டமைப்பு 2019இல் மேலும் வலுப்படுத்தப்பட்டது. இதற்கமைய உபாயச் சொத்து ஒதுக்குகளுடன் முதலீட்டுக் கொள்கைக் கூற்றும் முதலீட்டு வழிகாட்டல்களும் திருத்தப்பட்டு தற்போதுள்ள வேலை நடைமுறைகளை மேம்படுத்துவதற்காகவும் முதலீட்டு தீர்மானத்தினை மேற்கொள்ளும் செய்முறை தொடர்பில் பெருமளவு சுயாதீனத்தினை வழங்குகின்ற வேளையில் போதுமான மட்டத்தில் உள்ளகக் கட்டுப்பாடுகளைப் பேணுவதற்காக சந்தைத் தேவைப்பாடுகளுடன் இணங்கிச் செல்லும் விதத்தில் இற்றைப்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், இலங்கை மத்திய வங்கியின் இடர்நேர்வு முகாமைத்துவத் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் ஊ.சே.நிதியத் திணைக்களத்தின் முக்கிய நிதியியல் மற்றும் நிதியியல் அல்லா இடர்நேர்வு அம்சங்களை அடையாளம் காண்பதற்கும் அவை தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக உலக வங்கியின் நிபுணர் குழுவினால் அனைத்தையுமுள்ளடக்கிய இடர்நேர்வு மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டது. ஊ.சே.நிதியத் திணைக்களத்தின் நிதியியல் மற்றும் தொழிற்பாட்டு இடர்நேர்வுகளை முகாமைத்துவத்திற்கு அறிக்கையிடுகின்றமை தொடர்பான மார்க்கங்கள் உரிய வழிகாட்டல்களில் குறித்துரைக்கப்பட்டுள்ளன.