ஊ.சே. நிதியம் என்றால் என்ன?

நாங்கள் யார்?

1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஊழியர் சேமலாப நிதியம் இலங்கையில் தற்பொழுது மிகப் பாரியதும் பரந்ததுமான சமூக பாதுகாப்பு நிதியமாக விளங்குகின்றது. 2020 இறுதியில் ரூ.2814 பில்லியன் சொத்துத் தளத்துடன் விளங்கும் ஊ.சே.நிதியம் தனியார் துறை நிறுவனங்கள், அரச அநுசரணையுடனான கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள் மற்றும் தனியார் தொழில் துறைகளிலுள்ள ஊழியர்களின் “மனதிற்கு அமைதி” தரும் ஒன்றாக விளங்குகின்றது. ஊ.சே. நிதியத்தின் நோக்கம் யாதெனில் வாழ்வின் ஓய்வுகால கட்டத்தில் வாழும் ஊழியர்களுக்கு நிதியியல் உறுதிப்பாட்டிற்கு உத்தரவாதத்தினையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்/அவள் ஆற்றிய வகிபாகத்திற்கான வெகுமதியினையும் வழங்குவதேயாகும்.

ஊ.சே.நிதியம் எவ்வாறு நிருவகிக்கப்படுகிறது?

ஊ.சே. நிதியம், இலங்கையில் மிகப் பாரிய சமூக பாதுகாப்புத் திட்டமாக விளங்குவதுடன் ரூ.2,814 பில்லியனுக்கு மேற்பட்ட சொத்தினையும் கொண்டிருக்கிறது. ஊ.சே. நிதியத்தின் நிருவாக விடயங்கள் இலங்கை தொழில் திணைக்களத்தினால் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற வேளையில் நிதியத்தின் முகாமைத்துவம் இலங்கை மத்திய வங்கியின் ஊ.சே.நிதியத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஊ.சே.நிதியச் சட்டத்தின்படி, ஊழியரின் மாதாந்த சம்பளத்தின் மொத்த வருவாயில் ஊழியர் குறைந்தபட்சம் 8 சதவீதத்தினையும் தொழில்தருநர் 12 சதவீதத்தினையும் பங்களிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஊழியர்கள் அவர்களின் தொழில்புரியும் சூழல்களில் முதிர்ச்சியடைவதைப் போன்றே, அவர்களின் ஊ.சே.நிதிய நிலுவைகளும் வளர்ந்து வருகின்றன. மத்திய வங்கியினால் பேணப்படும் ஊ.சே.நிதியக் கணக்கில் ஒன்றுசேர்கின்ற நிலுவை திறைசேரி முறிகள், திறைசேரி உண்டியல்கள், பங்குரிமை மூலதனப் பிணையங்கள் மற்றும் கூட்டாண்மைப் படுகடன் பிணையங்கள் மற்றும் பணச் சந்தைச் சாதனங்கள் என்பனவற்றில் முதலீடு செய்யப்படுகின்றன. வருவாய் வீதத்தினைப் பொறுத்து, ஆண்டு வட்டி வீதம் பிரகடனப்படுத்தப்பட்டு ஊழியர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படுகின்றது. இதன் மூலம் ஊழியரொருவரின் ஊ.சே.நிதியப் பங்களிப்பு, ஆண்டுதோறும் வளர்ச்சியடைந்துவரும் பாதுகாப்பான முதலீடுகளில் முதலீடு செய்யப்படுவதனால் அது ஊழியரொருவரின் மனதிற்கு அமைதியைத் தருவதுடன் அவர்/ அவள் வாழ்வின் பிற்பகுதியில் அவர்களது குடும்பத்திற்கும் அன்பிற்குரியவர்களுக்கும் உறுதியையும் இயலாற்றலையும் வழங்கச் செய்கிறது.

ஊ.சே.நிதியம் உதவிக் கரமாகவோ அல்லது வருமானம் குறைந்த வாழ்வின் இறுதிப்பகுதியில் தோள்கொடுப்பவராகவோ இருப்பது மட்டுமன்றி, ஊழியர்கள் வீடமைப்புக் கடன்களைப் பெறுவதற்கும், ஓய்வுகால நன்மைகளுக்கு முன்னதாக 30 சதவீத மீளப்பெறுகைகளைப் பெற்றுக்கொள்வதற்குமான தேர்வினைக் கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலம் ஊ.சே.நிதியம் ஊழியர்களதும் ‘வீட்டுக்’ கனவினை நனவாக்குவதற்கு ஓய்விற்கு முன்னமேயே உதவுகிறது.

நிதியத்தின் பொதுவான தகவல்கள்
31.12.2020 இல் உள்ளவாறு
விடயம் 2019 2020(அ) மாற்றம் (%)
நிதியத்தின் மொத்தப் பெறுமதி (ரூ.பில்) 2,540.4 2,814.4 10.8
ஊழியர்களின் மொத்தப் பொறுப்பு (ரூ.பில்) 2,497.6 2,520.0 0.9
உறுப்பினர் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை (மில்) 19.4 19.0 (2.0)
பங்களிக்கும் உறுப்பினர் கணக்குகள் (மில்) 2.9 2.5 (14.2)
பங்களிக்காத உறுப்பினர் கணக்குகள் (மில்) 16.5 16.5 0.2
மொத்தப் பங்களிப்புக்கள் (ரூ.பில்) 157.2 150.5 (4.2)
மொத்த மீளளிப்புக்கள் (ரூ.பில்) 126.3 109.9 (13.0)
தேறிய பங்களிப்பு (ரூ.பில்) 30.9 30.9 0.0
மீளளிப்புக்களின் எண்ணிக்கை 241,581 197,401 (18.3)